“கல்முனை வடக்கு பிரதேச செயலம்ட தரமுயர்த்தல் செயல்பாடுகளில் முன்னேற்றம்”

July 12, 2019 44 0 0

முன்னேற்றம்… அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமையின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினரினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் 27 மேலதிக வாக்குகளினால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது: “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் செயற்பாடுகளை துரித கதியில் மேற்கொள்ள அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முதற்கட்டமாக நிதி அதிகாரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் கூடிய விரைவில் தீர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முஸ்லீம் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கைகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகின்றோம். அதைவிட, ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அவர்களே முழுமையான பொறுப்பு கூறவேண்டியவராக இருக்கின்ற நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமரை குற்றவாளியாக சித்தரித்து ஜனாதிபதியை பாதுகாக்கும் தோற்றப்பாட்டையும் கொண்டுள்ளது” என அவர் கூறினார்.

Categories: headlines, sri lanka
share TWEET SHARE