தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப முயற்சி… ரத்னதேரர் மீது ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

July 12, 2019 30 0 0

தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப முயற்சி… ரத்னதேரர் தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்ப முயற்சிக்கின்றார். தமிழ் மக்கள் அவரின் பேச்சைக் கேட்க முட்டாள்கள் அல்ல என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜே.வி.பி.யினரால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக் கேட்க முட்டாள்கள் அல்லர். எமக்கிடையே இருக்கும் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம். அத்துடன் அவர் ஷாபி வைத்தியர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவர் எதிர்பார்க்கும் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கங்கள் நூறுவீதம் உண்மை என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Categories: headlines, sri lanka
share TWEET SHARE