நிபா வைரஸ் பரவலை தடுக்க குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

June 10, 2019 119 0 0

நீலகிரி சுற்றுலா தலங்களில், சுற்றித் திரியும் குரங்குகளை, கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கேரளாவில், ‘நிபா வைரஸ்’ அச்சுறுத்தல் நிலவி வருகிறது. தமிழக – கேரள எல்லை பகுதியான, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சோதனை சாவடிகளில், ஆறு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், கேரளாவில் இருந்து வருபவர்களை, முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே, அனுமதிக்கின்றன. நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில், குரங்குகள் அதிகம் உள்ளதால், ‘நிபா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ‘குரங்கு, பறவை மற்றும் விலங்குகளிடம் நெருங்கி பழக வேண்டாம்’ என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுற்றுலா தலங்களில், உலா வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில், கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், ‘குரங்குகளால், நிபா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், சுற்றுலா தலங்களில், 10 இடங்களில் கூண்டு வைத்து, குரங்குகள் பிடிக்கப்படும்’ என்றனர்.

Categories: india news
share TWEET SHARE