பாகிஸ்தானில் நின்றிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து

July 12, 2019 20 0 0

நின்றிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து… பாகிஸ்தானில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயணிகள் ரெயில் மோதி நேரிட்ட கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் லாகூர் நகரில் இருந்து குவெட்டா நகருக்கு அக்பர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பயணிகள் ரெயில் வழக்கம்போல பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரில் இருந்து குவெட்டா நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. வழியில் சாதிக்காபாத் தாலுகாவில் வால்ஹார் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுடன் பயங்கரமாக மோதியது. பயணிகள் ரெயில், பிரதான பாதையில் ஓடுவதற்கு பதிலாக தவறான பாதையில் வந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதிவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த கோர விபத்தில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 79 பேர் படுகாயம் அடைந்தனர். அக்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் முற்றிலும் நாசமாகி விட்டது. ரெயில்வே உயர் அதிகாரிகளும், மீட்பு படையினரும் ரெயில் பெட்டிகளை வெட்டி, பலியானவர்களின் உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாதிக்காபாத் மற்றும் ரகீம் யார் கான் ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இம்ரான்கான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories: world news
share TWEET SHARE