ஓய்வுபெற்ற நர்ஸ்சுடன் காங்கிரஸ் தலைவர் நெகிழ்ச்சி சந்திப்பு

June 9, 2019 25 0 0

தான் பிறந்தபோது, பிரவச நேரத்தில் நர்ஸ்சாக பணியாற்றிய கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜம்மாவை நேரில் சந்தித்து ஆரத்தழுவினார் காங்கிரஸ் தலைவர் ராகுல். இதை பார்த்து அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். ராஜம்மா, பயிற்சி நர்சாக, புதுடில்லியின் ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணியாற்றிய நேரம் அது. 1970, ஜூன் 19 அன்று, அந்த பிஞ்சுக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்திய மகிழ்ச்சியை, பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் அவர் என்பதால் உற்சாகமாக இருந்தார், ராஜம்மா. பின்னர் அங்கு பயிற்சி முடித்து, ராணுவத்தில் நர்சாக பணியில் சேர்ந்தார். 1987ல் விருப்ப ஓய்வு பெற்று கேரளா திரும்பினார். தற்போது, வயநாடு தொகுதியில், சுல்தான் பத்தேரி அருகில் உள்ள கல்லுாரில் வசிக்கிறார், ராஜம்மா. ராகுல் அந்த மருத்துவமனையில் பிறந்ததையும், தான் அந்த குழந்தையை முதலில் கையில் ஏந்தியதையும், அடுத்த அறையில் ராஜீவும், சஞ்சயும் பதற்றத்தோடு அமர்ந்திருந்ததையும் பார்ப்போரிடம் எல்லாம் இப்போதும் பரவசத்துடன் சொல்லி மகிழ்வது ராஜம்மாவின் பழக்கம். கடந்த லோக்சபா தேர்தலில், வயநாட்டில் ராகுல் போட்டியிட்டார். அப்போது, ராகுல் இந்தியாவில் பிறக்கவில்லை என்ற சர்ச்சையை சுப்ரமணியசுவாமி எழுப்பியிருந்தார். அப்போது பேட்டியளித்தபோது ராஜம்மாள், மேற்கண்ட தகவல்களை கூறி, தற்போதும் டில்லி ஹோலி பேமிலி மருத்துவமனையில் அந்த ஆவணங்கள் இருக்கிறது என்று அடித்துச் சொன்னார். தேர்தல் பிரசாரத்தின் போது அவரை சந்திக்க இயலாத ராகுல், தற்போது வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் ராஜம்மாவை சந்தித்து, மகிழ்ச்சி பெருக்கோடு ஆரத்தழுவி கொண்டார். இதை கண்டு அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Categories: india news
share TWEET SHARE