“ஜனாதிபதியை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டுள்ளது தெரிவுக்குழு”

June 11, 2019 34 0 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதனால்தான் சுதந்திரக் கட்சி மற்றும் ஒருங்கிணைந்த எதிரணியினர் தெரிவுக்குழு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை. அத்தோடு, தெரிவுக்குழு விவகாரம் தொடர்பிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தெரிவுக் குழுவை ஸ்தாபிக்க ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஒருங்கிணைந்த எதிரணியினருமே இணங்கியிருந்தார்கள். இந்த இரண்டு தரப்பும் கைச்சாத்திட்ட பின்னர்தான் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அரசாங்கம் இந்த தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து யோசனையொன்றை முன்வைத்தது. இது நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டபோதே நான் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன். நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டுமாக இருந்தால் குறைந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையேனும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை. ஆளுநர்கள், உறுப்பினர்கள் என அனைவரையும் இந்த தெரிவுக்குழுவின் விசாரணைக்காக அழைக்க முடியும் என்று, அனுமதியேதும் பெறாமலேயே யோசனை முன்வைக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்தில் கூறப்பட்ட பல்வேறு விடயங்களில் இருந்து விலகி, இந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்ட காரணத்தினால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராகிய நாமும் ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர்களும் இதன் செயற்படுகளில் கலந்துகொள்ளாமல் இருந்தோம். தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதற்கான யோசனையை கொண்டுவந்த ஒருங்கிணைந்த எதிரணியின் உறுப்பினர்களும் இன்று அதிலிருந்து விலகியுள்ளார்கள். எம்மைப் பொறுத்தவரை ஜனாதிபதியை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட ஒன்றாகவே இது அமைந்துள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Categories: Uncategorized
share TWEET SHARE