அறிக்கை சமர்ப்பிப்பு… குண்டு வெடிப்பு குறித்த மூவர் கமிட்டி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

June 12, 2019 49 0 0

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது…இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி, தங்கள் இறுதி அறிக்கையை, அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் சமர்ப்பித்தது. இலங்கையில், ஈஸ்டர் பண்டிகை தினமான, ஏப்., 21ல், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில், 258 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு, உள்ளூர் பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என, இலங்கை அரசு தெரிவித்தது. இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்த, ஏப்., 22ல், மூவர் கமிட்டி அமைத்து, அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா, இந்த கமிட்டிக்கு தலைமை வகித்தார். இவருடன், முன்னாள் அரசு செயலர், பத்மாசிரி ஜெயமன்னே, காவல்துறை முன்னாள் தலைவர், என்.கே.இளங்காகூன் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த மூவர் கமிட்டி நடத்திய விசாரணை குறித்து, அரசிடம் ஏற்கனவே, இரு முறை இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணையின் இறுதி அறிக்கையை, அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம், மூவர் கமிட்டி நேற்று சமர்ப்பித்தது.இதற்கிடையே, இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு பின், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்களுக்கு, இலங்கையில் அநீதி இழைக்கப்படுவதாக, வடக்கு மாகாண முன்னாள் முதல்வர், விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ‘இந்த விவகாரத்தில், சர்வதேச விசாரணை தேவை’ என, அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த விசாரணை குறித்து கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், கார்டினல், மால்கம் ரஞ்சித் கூறுகையில், ”குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை திருப்தி அளிக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற மற்ற விசாரணைகளை போல, இதுவும் தோல்வியில் முடியும்,” என, அவர் கூறினார்.

Categories: sri lanka
share TWEET SHARE