ஈட்டோபிக்கோ வீதியொன்றில் துப்பாக்கி மீட்பு… 4 பேர் கைது

August 12, 2019 21 0 0

துப்பாக்கி மீட்பு… 4 பேர் கைது… ஈட்டோபிக்கோ வீதியொன்றில் வைத்து துப்பாக்கி ஒன்றினைக் கைப்பற்றிய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு ஆண்களைக் கைது செய்துள்ளனர். Park Lawn வீதி மற்றும் The Queensway பகுதியில், Burma Driveவில் வாகனம் ஒன்றின் சாரதி விதிமுறைகளுக்கு முரணாக வாகத்தைச் செலுத்திச் செல்வதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். அங்குள்ள வீடு ஒன்றின் முகப்பில் வாகனம் ஒன்றின் தோல் பை ஒன்றிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த நிலையில் துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றிய காவல்துறையினர், அந்த வாகனத்தில் பயணித்த நான்கு பேரைக் கைது செய்துள்ளதுடன், அவர்கள் நால்வர் மீதும் துப்பாக்கி தொடர்பிலான பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஏற்கனவே நீதிமன்றினால் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் எனவும், இவர் ஒட்டாவாவில் இருந்து வந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவரின் பெயரிலேயே குறித்த அந்த வீடு அண்மையில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட அந்தத் துப்பாக்கி பகுதியளவிலான தானியங்கித் துப்பாக்கி எனவும், குறித்த அந்த வகைத் துப்பாக்கி 1998ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் சில மணி நேரங்களுக்குப் பின்னர் மோப்பநாய் சிகிதம் வந்த அதிகாரிகள், அங்கு தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். எனினும் சம்பவ இடத்தில் துப்பாக்கிப் பிரயோகங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Categories: Canada
share TWEET SHARE