காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் இல்லை… டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக தகவல்

August 13, 2019 3 0 0

சரியான முடிவு… காஷ்மீர் விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்யப் போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், காஷ்மீர் பிரச்சினையை, சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வரும் 370 சட்டப்பிரிவு நீக்கம், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக, மறுசீரமைப்பு செய்யும் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை அமைதியாக பராமரித்து, முறையாக நடவடிக்கை மேற்கொண்ட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை, பன்னாட்டு அளவிலான பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில், தலையிடப் போவதில்லை என ரஷ்யாவும், சீனாவும் கூறிவிட்டன. இதனால் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா அவைக்கு கொண்டு செல்ல பகீரத முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்யப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திட்டவட்ட முடிவை மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூசுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், மத்தியஸ்தம் என்பது, இந்தியா அளிக்கும் ஒப்புதலைத் தொடர்ந்தே, அதுபற்றி யோசிக்கப்படும் என்பதில், டிரம்ப் தெளிவாக இருப்பதாகவும், இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், மத்தியஸ்தம் செய்வதை, இந்தியா ஒருபோதும் ஏற்பதில்லை என்பதன் அடிப்படையிலே, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என டிரம்ப் முடிவெடுத்திருப்பதாகவும், இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா கூறியிருக்கிறார். அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பது என்ற விஷயத்தில், அமெரிக்கா தெளிவான முடிவோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Categories: headlines, world news
share TWEET SHARE