மிசிசாகா பகுதியில் 3 வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து

August 13, 2019 4 0 0

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 401இல், மிசிசாகா பகுதியில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 401இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், டிக்சி வீதிப் பகுதியில் சரக்கு ஊர்தி ஒன்றும் மேலும் இரண்டு வாகனங்களும் மோதுண்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையின் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து சரக்கு ஊர்தியுடன் மோதுண்டதாகவும், பின்னர் அதிவிரைவுத் தடத்தினுள் உருண்டு சென்று தீப்பற்றிக் கொண்டதாகவும் ஆரம்ப விசாரணைகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து விட்டதனையும், மேலும் இருவர் உயிராபத்தான நிலையிலும், மேலும் மூவர் பாரதூரமான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனையும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தினை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடைசெய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Categories: Canada
share TWEET SHARE