வரி செலுத்துவோருக்கு இணையதளம் வாயிலாக நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை

August 16, 2019 1 0 0

கணினி வழி நோட்டீஸ்கள் அனுப்ப நடவடிக்கை… வருமான வரித்துறை அதிகாரிகள் அக்டோபர் 1 முதல் வரி செலுத்துவோருக்கு இணையதளம் மூலம் கணினி வழி நோட்டீஸ்களை மட்டுமே அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோர் அதிகாரிகளால் கெடுபிடி செய்யப்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வரி அளவீடுகள், விண்ணப்பங்கள், விசாரணைகள், உத்தரவுகள், விசாரணை அழைப்புகள், விதிவிலக்குகள், சரிபார்த்தல், அபராதம் உள்ளிட்டவை தொடர்பான உத்தரவுகள், நோட்டீஸ்கள் உள்ளிட்ட அனைத்தும் வருமான வரித்துறையின் வர்த்தகச் செயலி மூலமே அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கணினி வழியல்லாத நோட்டீஸ்கள், உத்தரவுகள் உள்ளிட்டவை ஒப்புதலுக்குரியவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக சில நேரங்களில் வருமான வரி தலைமை ஆணையர் நிலையிலான அதிகாரியின் ஒப்புதலுடன் அதிகாரிகள் நேரடி ஆவணங்களை பயன்படுத்தலாம் என்றும் ஆனால் அந்த நடவடிக்கைகளை 15 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோரும், உயர் அதிகாரிகளும் வெளிப்படைத் தன்மையுடன் ஆவணங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல அதிகாரிகள் பின் தேதியிட்ட ஆவணங்களை தயாரித்து முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும், இணைய வழி ஆவணங்கள் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE