“கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர்கள் உணர்கின்றனர்”

August 17, 2019 6 0 0

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் உணர்வு உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லுாரியின், உதவிப் பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் தாக்கல் செய்த மனு: மாணவர்கள், 42 பேர் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, 2019 ஜனவரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களுடன், நான் உள்ளிட்ட ஏழு ஆசிரியர்களும் சென்றோம். மாணவியர் அளித்த புகார்கள் குறித்து, பணிபுரியும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை விசாரிக்கும் குழு, என்னிடம் விளக்கம் கேட்டது. நான் விரிவான பதில் அளித்தேன்; விளக்கத்தில் திருப்தி இல்லாமல், விசாரணை நடத்தப்பட்டது. குழு முன் ஏழு மாணவியர் ஆஜராகினர். ஆசிரியர்கள், மாணவியர், குழுவிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல்களை கேட்டேன். விசாரணை முடிந்த பின் தான் அவைகள் வழங்கப்பட்டன. குழு பின்பற்றிய நடைமுறை, இயற்கை நீதியை மீறுவதாக இருந்தது. விசாரணை குழுவின் அறிக்கையில், நான் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்டு, இரண்டாவதாக அனுப்பிய, நோட்டீசையும், ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மற்றொரு பேராசிரியரின் பாலியல் தொந்தரவு செயலுக்கு உதவியாக இருந்ததாக, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. மனுதாரரின் நடத்தை, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் வருமா, இல்லையா என்பதை, தற்போதைய கட்டத்தில், ஆராய முடியாது. விசாரணை நடத்தப்பட்டதில், இயற்கை நீதி எதையும், குழு மீறவில்லை. குழுவின் அறிக்கையில், குறைபாடும் இல்லை. குழு அறிக்கை மற்றும் இரண்டாவதாக அனுப்பப்பட்ட, ‘நோட்டீஸ்’ விஷயத்தில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகள் ஏதாவது ஒரு வழியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாக, இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. இருபாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக, பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நல்ல கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிப்பது என்பது ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உள்ளது. பெண்கள் நலன்களை பாதுகாப்பதற்கு, பல்வேறு சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களை எல்லாம், நியாயமான காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனரா என்ற கேள்வியை, நமக்குள் கேட்க வேண்டும். சில சட்டங்களை அணுக, பெண்களுக்கு எளிதாக உள்ளது. ஆண்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில், பொய்யான வழக்குகளை தொடுத்து, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதும் உள்ளது. வரதட்சணை ஒழிப்பு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே, அப்பாவிகளின் நலன்களை பாதுகாக்கும் விதமாக, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க, தகுந்த சட்ட திருத்தங்களை ஏற்படுத்த, அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE