கோர்ட் உத்தரவு குறித்த பிரியங்கா போட்ட டுவிட்… கிரிமினில் வழக்குப்பதிவு

August 17, 2019 10 0 0

பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு… பெஹ்லூ கான் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து டுவிட்டர் பதிவு வெளியிட்டதால் கோர்ட் அவமதிப்பு எனவும், மதரீதியான கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து விட்டதாக கூறி காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்த பெஹ்லூ கான், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பால் வியாபாரத்திற்காக மாடு வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். மாடுகளை வண்டியில் ஏற்றி செல்லும் போது, மாட்டிறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக கூறி வாகனத்தை வழிமறித்த பசு பாதுகாவலர்கள், பெஹ்லூ கானை கடுமையாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். பெஹ்லூகானை தாக்கியதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் சிறுவர்கள். ஒருவரின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த ராஜஸ்தான் கோர்ட், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி பசு பாதுகாவலர்கள் 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பிரியங்கா, “இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அரசு இதில் தலையிட்டு நீதி கிடைக்க செய்யும் என நம்புகிறேன்” என கருத்து பதிவிட்டிருந்தார். இதனை எதிர்த்து சுதிர் ஓஜா என்பவர் பிரியங்கா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது பற்றி மனுதாரரின் வக்கீல் கூறுகையில், மத கலவரத்தை தூண்டும் வகையிலும், கோர்ட்டின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையிலும் கருத்து பதிவிட்டதன் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது வரும் ஆக.,26 அன்று விசாரணை நடைபெற உள்ளது என்றார்.

Categories: headlines, india news
share TWEET SHARE