அம்பாறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

September 11, 2019 5 0 0

போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி…அம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 35க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், சாய்ந்தமருது போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இத்திடீர் சோதனை நடவடிக்கையில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விழிப்பூட்டல் செயற்பாடுகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, வேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது அம்பறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் அம்பாறை கல்முனை உள்ளிட்ட பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் தலைமையில் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் 35க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 70க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது. குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Categories: sri lanka
share TWEET SHARE