காவல்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப கோரும் வழக்கு நாளை விசாரணை

September 11, 2019 5 0 0

நாளை விசாரணைக்கு வருகிறது… காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரியும், காவல்துறை சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் தொடரப்பட்டுள்ள வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னையை சேர்ந்த அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், தகவல் உரிமைச்சட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னையில் அமைந்துள்ள பூக்கடை வடக்கு சரக காவல் மாவட்டத்தில் மட்டும் ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர்கள் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், சென்னையின் மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தலைநகரமான சென்னையில் காவல் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இதைவிட மோசமான நிலை இருக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரின் சுமைகளை போக்கும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் எனவும், காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறும் தான் அளித்த மனு மீது உள்துறை செயலாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Categories: india news
share TWEET SHARE