சரியானபடி தூங்காமல் இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்

September 11, 2019 17 0 0

சரியானபடி தூங்காமல் இருக்கும் பெண்கள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ஆண்களை விட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம் கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை. தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெண்கள் தூங்கும் நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. கணவன் வரும் வரை சாப்பிடாமலும், தூங்காமலும் இருப்பது போன்ற வழக்கங்களால், பெண்கள் தாங்களாகவே தூங்கும் நேரத்தைக் குறைத்து விட்டார்கள். 70 சதவிகித பெண்கள் தங்களுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அறியாமல் இருப்பது தான் வேதனை. இன்றைய கால கட்டத்திலோ, பெண்கள் நினைத்தால் கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை. வேலைகளை முடித்து விட்டுத் தாமதமாகச் சாப்பிடுவதும், உடனே படுத்து விடுவதும் கூட உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு தான். இரவு நேரப் பணி என்பதும் நம் உடலுக்கு ஒவ்வாத விஷயமே. பகலில் உழைப்பதும், இரவில் உறங்குவதுமே இயற்கையின் நியதி. இந்தச் சக்கரத்தை மாற்றி, பகலில் உறங்கி, இரவில் வேலை செய்வதை நம் மனமும் உடலும் ஏற்றுக் கொள்ளாது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ’மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகம் சுரக்கும். பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கான காரணம், இது குறைவாக சுரப்பது தான்! இந்தச் செயல்பாட்டைத் தலை கீழாக மாற்றும் போது, உடல் நலமும் பாதிப்படையும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது, அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக் கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான சிக்கலுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை காரணமாக ஆரம்ப கால கட்டத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து வெளிப்பட சரியான நேரத்தில் தூங்க வேண்டும்.

Categories: womens-tips
share TWEET SHARE