ப.சிதம்பரம் ஜாமீன் கோரி மனு தாக்கல்… காவலில் எடுத்து விசாரிக்க அமாலாக்கத்துறை திட்டம்

September 11, 2019 4 0 0

ஜாமீன் கோரி மனுதாக்கல்… ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடையே, ப.சிதம்பரத்திடம் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவர் கார்த்திக் சிதம்பரம், மற்றும் இந்திராணி முகர்ஜி உடன் தொடர்பில் இருந்தாரா என பல்வேறு சந்தேகங்களுக்காக கேள்விகளை, அதிகாரிகள் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories: headlines, india news
share TWEET SHARE