அதிகாரிகள்தான் காரணம்… நடவடிக்கை எடுக்காதது ஏன்? பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சம்பவத்தில் நீதிபதிகள் கடும் கண்டனம்

September 13, 2019 4 0 0

சென்னையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விதிமீறல் பேனர் விவகாரத்தில் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில், டிஜிட்டல் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் குறித்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அப்போது பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை, மெத்தனமாக உள்ளனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தலைமை செயலகத்தை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றுங்கள் என்று மட்டும்தான் தாங்கள் உத்தரவிடவில்லை எனக் கூறிய நீதிபதிகள், ஏராளமான உத்தரவுகள் பிறப்பித்தும் பலனில்லை என்றும் தெரிவித்தனர். இதற்காக அரசின் நிர்வாகத்தை தாங்கள் நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டனர். ஆளும் கட்சியினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சட்ட விரோத பேனர்கள் வைப்பதாக கூறிய நீதிபதிகள், மக்களின் ரத்தத்தை உறிபவர்கள் போல அரசு அதிகாரிகள் உள்ளனர் என்றும் கண்டித்தனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் என்றும், அதிகாரிகள் ஆளுங் கட்சியின் முகவர்களாக மாறுகின்றனர் என்றும் கண்டனம் தெரிவித்தனர். விபத்து ஏற்படும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு மட்டும் அளித்து அதிகாரிகள் பிரச்சினையை முடித்துக் கொள்கிறார்கள் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பேனர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்தவில்லை என கூறி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில், அந்த வழக்கு பின்னர் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனை நோக்கி, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சட்டவிரோத பேனர்களை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகளால் ஏன் அமல்படுத்த முடியவில்லை என நீதிபதிகள் கேட்டனர். சட்டவிரோத பேனர்களுக்கு அரசியல் கட்சியினரே பெருமளவு காரணம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கிடா வெட்டு, காது குத்து போன்ற சொந்த நிகழ்ச்சிகளுக்குகூட பேனர் வைத்தால்தான் அமைச்சர்கள் விழாவுக்கு வருவார்களா என தமிழிலேயே கேள்வி எழுப்பினர். பேனர்கள் வைக்காவிட்டால், அமைச்சர்களுக்கு வழிதெரியாமல் போய்விடுமா, இல்லை அமைச்சர்கள் தொலைந்து போய்விடுவார்களா என்றும் நீதிபதிகள் வினவினர். நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, விதிமீறல் பேனர்கள் முன்கூட்டியே வைக்கப்படும்போது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என கேட்ட நீதிபதிகள், பொது சாலையை ஆக்கிரமித்தும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பேனர்கள் வைக்கப்படும்போது கூட ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேள்வி எழுப்பினர். சட்ட விரோத பேனர்கள் விவகாரத்தில் எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அரசு செயல்படுத்துவதில்லை என தலைமை வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அரசின் மீதான நம்பிக்கையை நீதிமன்றம் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டனர். இன்னும் எத்தனை உயிர் பலிகளை அரசும், அதிகாரிகளும் எதிர்பார்க்கிறீர்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறீர்கள் என நீதிபதிகள் காட்டமாக கேட்டனர். நீதிபதிகளின் கேள்விக் கணைகளாலும், கண்டனங்களாலும் அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிற்பகலில் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பரங்கிமலை துணை ஆணையர் பிராபகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன், சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் விபத்துக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றம் கூறியிருந்தபடி, பேனர்கள் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதாக, திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவித்தார். மற்ற கட்சியினர் நிலை என்ன என்று கேட்ட நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர் பலியாகி இருக்காது என குறிப்பிட்டனர். விவாகரத்திற்கு மட்டும் தான் தற்போது பேனர் வைப்பதில்லை என்றும், மற்றபடி அனைத்து நிகழ்வுகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் உள்ளது எனவும் நீதிபதிகள் கூறினர். சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பது, மனித உரிமை மீறல் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சாலைகளில் உள்ள காமிராக்கள் மூலம் இது போன்ற விதிமீறல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க கூடாதா? எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேனர் விழுந்ததில் உயிரிழந்த இறந்த சுபஸ்ரீ-யின் தந்தை புகார் அளிக்கும் வரை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் எனக் கேட்ட நீதிபதிகள், சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஏன் போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வினவினர். விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தலைமை செயலாளர் கண்காணித்து, அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமும் கண்காணிக்கும் எனவும் எச்சரித்தனர். பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இடைக்கால இழப்பீடை அரசு வழங்க வேண்டும். பின்னர் அதை சம்மந்தபட்ட, கடமை தவறிய அதிகாரிகளிடம் வசூலித்து கொள்ளலாம் என்றும் ஆணையிட்டனர். வழக்கு விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories: headlines, india news
share TWEET SHARE