அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்த ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

September 13, 2019 8 0 0

ப.சிதம்பரம் மனு தள்ளுபடி… ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன. சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு கடந்த 5ஆம் தேதி அனுப்பப்பட்டார். இதனிடையே அமலாக்கத் துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு குறித்து அமலாக்கத் துறையின் பதிலை கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் முன்பு சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. அதற்கான தேவை ஏற்படும்போது நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விண்ணப்பிக்கும் என்று தெரிவித்தார். இதற்கு ப. சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், சிதம்பரத்தை கைது செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்ததாகவும், ஆனால் தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார். சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கம் என்று கபில் சிபல் வாதிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார். மேலும், அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவால் வரும் 19ம் தேதி வரை, டெல்லி திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ப. சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE