மம்தா பானர்ஜியை தாக்கிய வழக்கு; 29 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார் லாலு ஆலம்

September 13, 2019 4 0 0

29 ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்… மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 29 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் இளைஞரணி தலைவராக இருந்தார். அந்த ஆண்டில், ஆகஸ்ட் மாதம் அவரது தலைமையில் பேரணி ஒன்று அவரது வீட்டில் இருந்து தொடங்கி நடைபெற்றது. அப்போது, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லாலு ஆலம் மற்றும் சிலரால் மம்தா கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதில் தலை உட்பட உடல் முழுவதும் மம்தா படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாலு ஆலம் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக மம்தா அதன் பின்னர் உருவெடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த லாலு ஆலம், போதிய சாட்சி இல்லாததால் 29 வருடங்களுக்கு பின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் சாட்சியங்கள் பலர் உயிரிழந்துவிட்ட நிலையில் இதுகுறித்து விசாரணையை தொடர்ந்து நடத்துவதினால் எந்த முடிவும் கிடைத்து விடாது என்று லாலு ஆலம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதையடுத்து, அலிபோர் நீதிமன்றம் வழக்கினை முடித்துவைத்து, லாலு ஆலமை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

Categories: india news
share TWEET SHARE