முதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு சுற்றுப்பயணம்

September 13, 2019 5 0 0

வெளிநாடு செல்கிறார் ஓ.பி.எஸ்… துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவர ஏற்பாடு நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டு யுக்திகளை பார்வையிட்டு மேற்கண்ட துறைகளை மேம்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று வர முடிவு செய்துள்ளார். மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்கப்பூரில் உள்ளது போல் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். அதனால் சிங்கப்பூருக்கு 2 நாள் செல்ல பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் வீட்டு வசதி கண்காட்சியை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். குறைந்த இடத்தில் அதிக வசதிகளுடன் கட்டிடங்களை கட்டுவது எப்படி? குடிசை மாற்று வாரிய வீடுகளை பொலிவுடன் அமைத்து கொடுப்பது எப்படி? நகர்ப்புற வளர்ச்சியை எவ்வாறு திட்டமிடுவது போன்றவற்றை கண்டறியவும் சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் 2-வது வாரம் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்லும் வகையில் அவரது சுற்றுப் பயணம் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: india news
share TWEET SHARE