பத்தாம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடத்திற்கு இனி ஒரே தேர்வுதான்

September 14, 2019 10 0 0

ஒரே தேர்வு நடத்தப்படும்… பத்தாம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தேர்வர்களுக்கான மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கான தேர்வில் இரண்டு தாள்கள் இடம்பெற்றதாகவும் நடப்பு கல்வி ஆண்டு முதல் அவை ஒரே தாளாக மாற்றப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் விடைத்தாள் திருத்தும் பணி நாட்கள் குறைந்து, ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் நாட்கள் அதிகரிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே தேர்வு என்பதால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். விடைத்தாள் திருத்தும் பணி நாட்கள் குறைந்து தேர்வு முடிவுகள் விரைவாக அறிவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு மைய அச்சகத்தில் ஓராண்டுக்கு அச்சடிக்க பயன்படுத்தப்படும் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்கள் சேமிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போன்று இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ல் மைய அரசு ஏற்படுத்தி உள்ள திருத்தத்தின்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படக்கூடாது என்றும், மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: india news
share TWEET SHARE