பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை… திமுக தலைவர் எச்சரிக்கை

September 14, 2019 9 0 0

பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை… தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் பலியாகியிருப்பதாகக் கூறியுள்ளார். மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் தி.மு.க. நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியுள்ளதாகவும், மீண்டும் அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்களை விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர சாலை மற்றும் தெரு நெடுகிலும் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை ஏற்க முடியாது. அறிவுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தான் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தால் பங்கேற்கப்போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories: india news
share TWEET SHARE