ஆண்களை விட குறைவான தொகை சம்பளமாக பெறும் பெண்கள்

October 8, 2019 57 0 0

குறைவாக ஊதியம் பெறும் பெண்கள்… கனேடியப் பெண்கள் 2018-ம் ஆண்டில் தங்கள் பணிகளின்போது ஒரு மணி நேரத்துக்கு ஆண்களை விட சராசரியாக 13.3 வீதம் குறைவான தொகையை ஊதியமாகப் பெறுவதாக கனேடிய புள்ளிவிபரத்துறை திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பெண்களின் ஊதியம் 5.5 வீதம் உயர்ந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 25 முதல் 54 வயது வரையான பெண்கள் தமது பணிக்கான ஊதியமாக ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 26.93 டொலர்களை சம்பாதித்துள்ளனர். இத்தொகை ஆண்களின் மணித்தியாலத்துக்கான சராசரி ஊதியத்தை விட 4.13 டொலர் குறைந்ததாகும். ஆண்கள் சராசரியாக ஒரு மணித்தியாலத்துக்கு 31.05 டொலரை ஊதியமாகப் பெற்றுள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு டொலருக்கும் ஆண்களை விட சராசரியாக 87 சென்ட்களை பெண்கள் குறைவாக பெற்றுள்ளமையை இது காட்டுகிறது. கனடாவிலும் பிற இடங்களிலும் பாலின ஊதிய இடைவெளி காலப்போக்கில் குறைந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவில் பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். உயர் கல்வி நிறுவனங்களில் தங்கள் கல்வித் துறைகளை பன்முகப்படுத்தியுள்ளனர். உயர் நிலைத் தொழில்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனாலும் பாலின அடிப்படையிலான ஊதிய ஏற்றத்தாழ்வு தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதை இந்த ஆய்வு முடிவு உணர்த்துகிறது.

Categories: Canada
share TWEET SHARE