பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தொலைக்காட்சி விவாதத்தில் ஒரே மேடையில் தோன்றிய கட்சித் தலைவர்கள்

October 8, 2019 38 0 0

கனடா: ஒரே மேடையில் தோன்றிய முக்கிய கட்சி தலைவர்கள்… கனடா பாராளுமன்றத் தேர்தலை ஒட்டிய தொலைக்காட்சி விவாதத்தில் கனேடிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி திங்கட்கிழமை அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டனர். ஆங்கில மொழியில் இடம்பெற்ற இந்த விவாதம் கூட்டாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி விவாதமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. லிபரல் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஸ்கீயர், என்.டி.பியின் ஜாக்மீத் சிங், பசுமைக் கட்சித் தலைவர் எலிசபெத் மே, கனடாவின் மக்கள் கட்சியைச் சேர்ந்த மாக்சிம் பெர்னியர், மற்றும் – கியூபெக்கில் – யவ்ஸ்-பிரான்சுவா தலைமையிலான பிளாக் கியூபாகோயிஸ் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர். இதில் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோவை கன்சர்வேடிவ் தலைவர் ஆண்ட்ரூ ஷீயர் கடுமையாக வர்த்தைகளால் தாக்கினார். ட்ரூடோ ஒரு போலி, மோசடிப் பேர்வழி. கனேடியப் பிரதமராக மக்களால் மீண்டும் தேர்தெடுக்கப்பட அவர் தகுதியற்றவர் என ஆண்ட்ரூ ஷீயர் கடும் விமர்சனம் செய்தார். எஸ்.என்.சி-லாவலின் விவகாரம் மற்றும் இனவாத புகைப்பட சர்ச்சைகள் குறித்தும் ஷீயர் விமர்சித்தார். ஆனால் லிபரல் தலைவர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது அரசின் செயற்பாடுகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதிகம் பேசினார். தனது காலநிலை மாற்றத் திட்டத்தை முன்னிறுத்தி அவர் தனது விவாதத்தைக் கொண்டுசென்றார். 2015 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை தனது கட்சி வழங்கிவருவதாக ஜஸ்ரின் ட்ரூடோ கூறினார். இந்த விடயங்களில் லிபரல் சிறப்பாக செயற்பட்டுள்ளது என்பதை வாக்காளர்களை கவரும் நோக்கில் ட்ரூடோ அழுத்திச் சொன்னார். பிளாக் தலைவர் பெரும்பாலும் கியூபெக்கர்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். சர்ச்சைக்குரிய மாகாண மதச்சார்பின்மைச் சட்டம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். எலிசபெத் மே காலநிலை பிரச்சினைகளை முன்னிறுத்தி தனது கடும் வாதங்களை முன்வைத்தார். இதேவேளை, எண்ணெய் குளாய் திட்டம் குறித்து லிபரல் தலைவர் ட்ரூடாவை அவர் கடுமையாக விமர்சித்தார். இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் நீங்கள் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தலைவராக இருக்க முடியாது என திருமதி மே ட்ரூடோவிடம் கூறினார். கனடாவின் மக்கள் கட்சி தலைவர் மாக்சிம் பெர்னியர் கனடாவின் குடியேற்ற கொள்கைகளை அதிகம் விமர்சித்தார். குடியேறியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து அவர் அதிகம் வாதிட்டார். அதற்காக அவர் விவாத மேடையில் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார்.

Categories: Canada
share TWEET SHARE