நொய்டாவில் அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்… பொதுமக்கள் வரவேற்பு

October 9, 2019 18 0 0

அந்தரத்தில் உணவகம்… உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், அந்தரத்தில் உணவு உட்கொள்ளும்படியாக அமைந்துள்ள உணவகம் ஒன்று பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘பிளை டைனிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவகம், தரையிலிருந்து சுமார் 160 அடி உயரத்தில் அந்தரத்தில் அமர்ந்து சாப்பிடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள அந்தரத்தில் தொங்கும் உணவகம் ஒன்றை பார்த்த நிகில்குமார் என்பவர், அதைப்போலவே உணவகம் ஒன்றை அமைக்கவேண்டும் என திட்டமிட்டு இதனை அமைத்துள்ளார். உணவருந்த வருவோர், கிரேன் மூலமாக மேலே தூக்கிச் செல்லப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 24 இருக்கைகளை கொண்ட இந்த உணவகம், ஜெர்மனி நாட்டின் தரச்சான்றிதழை பெற்ற உபகரணங்களால் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல இங்கு நிறுவப்பட்டுள்ள க்ரேன், துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 160 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் கர்ப்பிணிகளோ, 4 அடி உயரத்துக்கு குறைவான குழந்தைகளோ பாதுகாப்பு கருதி இந்த உணவகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. சுவையான உணவுடன் சேர்த்து, சாகசத்தையும் வழங்குவதால் இந்த உணவகம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories: india news
share TWEET SHARE