பெண்களுக்கான தடை நீக்கம்… விளையாட்டுப் போட்டிகளை பார்க்க அனுமதி

October 9, 2019 9 0 0

பெண்களுக்காக தடை நீக்கம்…ஈரானில் கால்பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளராக செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான டிக்கெட்டுக்கள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இஸ்லாமிய மதகுருக்களின் வலியுறுத்தலின் பேரில் 40 ஆண்டுகளாக விளையாட்டு மைதானங்களில் பார்வையாளராக அமர்ந்து போட்டிகளைக் காண பெண்களுக்கான தடை அமலில் உள்ளது. ஆண் போல ஆடையணிந்து, கால்பந்தாட்டத்தைக் காண மைதானத்துக்கு வந்தமைக்காக சிறை தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து பெண்களை கால்பந்து போட்டிகளை காண ஈரான் அனுமதிக்கவில்லை என்றால் உலக கால்பந்து சம்மேளனத்தில் இருந்து அந்நாட்டை நீக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள போட்டியை பெண்களும் மைதானத்திற்கு சென்று பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு டிக்கெட் விற்பனை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே பெண்களுக்கான டிக்கெட்டுக்கள், கவுன்டர்களிலும், ஆன்லைனிலும் விற்றுத் தீர்ந்தன. இதுவரை தொலைக்காட்சிகளிலேயே கண்டு ரசித்து வந்த தங்களின் விருப்பமான ஆட்டத்தை, நேரில் கண்டு ரசிக்க ஆர்வத்தோடு இருப்பதாக பெண் ரசிகர்கள் தெரிவித்தனர். ஒரு லட்சம் பேர் அமரக் கூடிய மைதானத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 ஆயிரத்து 500 டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன. ஆண்கள் அமரும் இடத்தில் இருந்து தனியே பிரிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான பார்வையாளர் மாடத்தில் சுமார் 150 பெண் காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Categories: world news
share TWEET SHARE