வீடுகளை முறையாக அமைத்து தர வலியுறுத்தி 2வது முறையாக ஆர்ப்பாட்டம்

October 9, 2019 23 0 0

வீடுகளை முறையாக அமைத்துத்தர கோரி ஆர்ப்பாட்டம்… ஹற்றன்- போடைஸ் பகுதிகளிலுள்ள மக்கள் தங்களுக்கான முறையான வீடுகளை அமைத்து தரக்கோரி இரண்டாவது முறையாகவும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஹற்றன்- போடைஸ் 30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில், கடந்த வருடம் (29.12.2018) தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்த மக்களை அங்கிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வீடுகளை அமைத்து கொடுக்காதமையை கண்டித்தே அவர்கள் இரண்டாவது முறையாக ஆர்ப்பாட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தமது கோரிக்கைகளை கோஷமிட்டும் பாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்ட பேரணியானது, தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பு பகுதியிலிருந்து ஹற்றன் போடைஸ் பிரதான வீதி வழியாக போடைஸ் தோட்ட தொழிற்சாலை வரை சென்றடைந்தது. இதையடுத்து பேரணியாக சென்ற பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் வாழ்ந்து வந்த லயன் குடியிருப்புகள் தீயினால் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்தை எட்ட இன்னும் ஒன்றரை மாதங்களே காணப்படுகின்றது. இந்நிலையில் ஆரம்பத்தில் எமக்கு தனி வீடுகள் அமைத்து தருவதாகவும் அதற்கான காணிகளை பெற்று தருவதாகவும் உறுதி கூறிய தலைவர்களும் அமைச்சர்களும் எம்மை மறந்து விட்டனர். அதேநேரத்தில் எமக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதில் பல்வேறு அரசியல் தொழிற்சங்க கருத்து முரண்பாடுகள் மற்றும் தோட்ட நிர்வாக பிரச்சினை ஆகியன காணப்படுவதாகவும் இதனால் வீடு கட்டுவதற்கான இடங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இது தேர்தல் காலம் என்பதினால் எமது வாக்குகள் கட்சிகளுக்கு தேவைப்படும். ஆகையால் எமது நிலையை இத்தருணத்தில் வெளிக்கொணர்ந்து தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். அதேபோல் தற்காலிகமாக வசித்து வரும் கூடாரங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கரையான் அறிக்கும் நிலைக்கும் சென்று அங்கும் துன்பகரமான வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது. எனவே எமது கோரிக்கை ஒன்றுதான், வாழ்வதற்கு வீடுகளை அமைத்து தாருங்கள் என்பது மாத்திரமே இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும். எமக்கு உரிய தீர்வை வழங்க அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் எடுக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரதத்தில் நாம் ஈடுபட ஒருமித்த முடிவை எடுத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

Categories: sri lanka
share TWEET SHARE