நிபந்தனைகளுடன் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

December 4, 2019 48 0 0

நிபந்தனைகளுடன் ஜாமீன்… ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வெளிநாட்டிற்கு அனுமதியின்றி செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தனித்தனியே வழக்குப்பதிவு செய்தன. இந்த 2 வழக்குகளிலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இருந்தபோதிலும் அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்கப்படாததால், டெல்லி திகார் சிறையில் தொடர்ந்து சிதம்பரம் 100 நாள்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீன்கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது,

அதன்படி, ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், ஜாமீனில் இருக்கும் காலத்தில் ஆதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, பத்திரிகைகளுக்கு பேட்டியோ அல்லது இந்த வழக்குத் தொடர்பாக வெளிப்படையான அறிவிப்புகளையோ வெளியிடக் கூடாது என நிபந்தனைகளை விதித்தனர்.

2 லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகையும், அதற்கு ஈடாக 2 பேரின் உத்தரவாதமும் வழங்க வேண்டும், ஜாமீனில் இருக்கையில் நீதிமன்ற அனுமதியில்லாமல் ப. சிதம்பரம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே சிபிஐ வழக்கிலும் ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை வழக்கிலும் தற்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி திகார் சிறையிலிருந்து விரைவில் சிதம்பரம் வெளியே வரவுள்ளார்.

Tags: ஜாமீன், திகார் சிறை, ப.சிதம்பரம், வழங்கல் Categories: india news
share TWEET SHARE
Related Posts