ஆவணங்கள் தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும்… பொன். மாணிக்கவேல் பதில் கடிதம்

December 4, 2019 47 0 0

ஒப்படையுங்கள்… சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒப்படைக்குமாறு, சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம் அனுப்பி இருக்கும் நிலையில், ஆவணங்கள் தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலை, அவர் ஓய்வு பெற்ற பின் சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. எனவே சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க இயலாது என்று பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமையிடம் ஒப்படைக்குமாறு ஏடிஜிபி அபய்குமார் சிங் பொன் மாணிக்க வேலுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங்கிற்கு, பொன் மாணிக்கவேல் எழுதியிருக்கும் கடிதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி செயல்பட வேண்டியது தனது கடமை மற்றும் பொறுப்பு என்பதை தான் அறிவதாக குறிப்பிட்டுள்ளார். தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிடி வடிவில் இருப்பதாகவும், அதனை தொகுத்து விரைவில் வழங்கப்படும் என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Tags: ஆவணங்கள், கடிதம், சிலை கடத்தல் Categories: india news
share TWEET SHARE
Related Posts