முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

November 6, 2019 51 0 0

பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

அந்த வகையில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.

கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Tags: கண்கள், நினைவாற்றல், பனங்கற்கண்டு, முருங்கைப்பூ Categories: womens-tips
share TWEET SHARE