“அணு உலை தொழில் நுட்பத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவோம்”

December 2, 2019 11 0 0

உறுதியளித்துள்ளனர்… கனடாவில் அணு உலை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ, சஸ்காட்செவன் மற்றும் நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் முதல்வர்கள் உறுதியளித்துள்ளனர்.

மாகாண முதல்வர்களான போர்டு, ஸ்கொட் மோ மற்றும் பிளேய்ன் ஹிக்ஸ் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கனடாவின் அனைத்து மாகாண முதல்வர்களின் கூட்டத்திற்கு முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் மூவரும் கையெழுத்திட்டனர்.

கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிலக்கரி போன்ற சுற்றுச் சூழல் மாசுக்கு ஏதுவான எரிசக்தி மூலங்களிலிருந்து விலகிச் செல்லவும் ஏதுவாக அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சிறிய அணுசக்தி உலைகள் கட்டமைக்க எளிதானவை. பெரிய உலைகளை விட பாதுகாப்பானவை மற்றும் நிலக்கரியை விட தூய்மையான ஆற்றலாகக் கருதப்படுகின்றன என்று முதல்வர்கள் கூறுகின்றனர். கனடாவில் சுமார் 12 நிறுவனங்கள் தற்போது கனேடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்துடன் அணுசக்தி பயன்பாடு குறித்த ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்நிறுவனங்கள் அணு உலை வடிவமைப்புகளை மதிப்பாய்வு செய்கின்றன.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நாங்கள் ஒன்றிணைந்துள்ளதைப் போன்று கனடா மற்றும் உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் கனடியர்கள் ஒன்றாக இணைய வேண்டும். இதன் மூலம் கால நிலை மாற்ற சிக்கல்களை எதிர்கொள்வதில் பெரிய பங்கை வகிக்க முடியும் என்று மோ கூறினார்.

கார்பன் உமிழ்வை 2005-இல் இருந்த நிலையை விட 2030 க்குள் 30 சதவீதம் குறைக்கும் நோக்கத்தை அணு சக்தி உலைகள் ஊடாக எட்ட முடியும். இதே காலப்பகுதியில் சஸ்காட்செவன் மாகாணத்தில் கார்பன் உமிழ்வை 70 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாகாண முதல்வர் மோ கூறுகிறார்.

மாகாணங்களின் மூன்று எரிசக்தி அமைச்சகங்ளும் புதிய ஆண்டில் கூடி எவ்வாறு முன்னேறலாம் என்பது பற்றி விவாதிக்கவுள்ளன. ஒட்டாவாவும் மாகாணங்களும் முரண்படும் நேரத்தில், ஒற்றுமையைக் காட்ட இது சரியான நேரம் என்று ஹிக்ஸ் கூறினார்.

எதிர்கால பிரச்சினைகளை எதிர்கொள்ள கனேடிய மாகாணங்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன? என்பதை மாகாண முதல்வர்களின் இணைவு காட்டுகிறது என அவர் தெரிவித்தார். ஒன்ராறியோ, சஸ்காட்செவன் மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைத் தவிர அணு உலை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இதுவரை வேறு மாகாணங்கள் கையெழுத்திடவில்லை.
ஆனால் அனைவரையும் வரவேற்கிறோம் என்றும் போர்டு கூறினார்.

இதேவேளை, புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குவது ஒரு கடினமான பணி. இந்த திட்டத்திற்கு தேசிய அளிவில் ஆதரவு தேவைப்படும் என்று ஹிக்ஸ் ஒப்புக் கொண்டார். தேசிய அளவில் தேவையான மின்சாரத்தில் சுமார் 8.6 சதவீதம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நியூ பிரன்சுவிக்கில் இது 15.8 சதவீதமாக உள்ளது என் நியூ பிரன்சுவிக் முதல்வர் பிளேய்ன் ஹிக்ஸ் தெரிவித்தார்.

தனது மாகாணத்தின் எரிசக்தி உற்பத்தியாளர்கள் கார்பன் வரியால் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்ராறியோவில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதேவேளை, சஸ்காட்செவன் நிலக்கரி மூலமே மாகாணத்தின் மின்சார தேவையில் 46.6 சதவீதத்தை ஈடு செய்கிறது.

கனடாவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய அணு உலைகள் மூலம் சுமார் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபபடுகின்றது. இது ஒரே நேரத்தில் சுமார் 600,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானது என்பது குறிப்படத்தக்கது.

Tags: அணு உலைகள், பாரம்பரிய, மின்சாரம் உற்பத்தி Categories: Canada
share TWEET SHARE