மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்… முதலமைச்சர் அறிவிப்பு

December 2, 2019 12 0 0

தற்காலிகமாக நிறுத்தம்… மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், அத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பை-அகமதாபாத் இடையே முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், மராட்டிய சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்திற்கு பின்னர், மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி அரசின் முதலமைச்சரான உத்தவ் தாக்ரே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எடுக்கப்பட்ட முடிவைப் போன்று, புல்லட் ரயில் திட்டம் குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதன்படி, புல்லட் ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றார். இந்த திட்டத்தில் வேறு ஏதேனும் மாற்றம் செய்ய முடியுமா? என்றும், திட்ட மதிப்பீடு, அதில் உள்ள நெருக்கடிகள், காலக்கெடு என அனைத்து அம்சங்களையும் ஆராய இருப்பதாகவும், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்திருக்கிறார்.

மெட்ரோ உள்ளிட்ட பெரிய பெரிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை விட, வேளாண் மேம்பாடு, மக்களுக்கான அடிப்படை சுகாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த இருப்பதாகவும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபோது செய்த தவறுகளையே, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது செய்யாமல், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத் தரும் பணியை தேவேந்திர ஃபத்னாவிஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தவ் தாக்ரே வலியுறுத்தியிருக்கிறார்.

Tags: தற்காலிகம், நிறுத்தம், புல்லட் ரயில், முதல்வர் உத்தவ்தாக்ரே Categories: india news
share TWEET SHARE
Related Posts