Web Advertisement Contact

அரசிலமைப்பு திருத்தத்தை மக்களை ஐக்கியப்படுத்தி நிராகரிக்க வேண்டும்

Updated in 2020-Sep-13 08:37 AM

எதிர்க்க வேண்டும்... மீண்டும் இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க காரணமாக அமையவுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மக்களை ஐக்கியப்படுத்தி எதிர்த்து நிராகரிக்க வேண்டும் எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாகப் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆகிக் கொண்டார். அண்மைய பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்களை பெறும் வாய்ப்பைப் பெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராகி கொண்டார். இதன் மூலம் கோட்டா - மகிந்த தலைமையிலான குடும்ப ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் உடனடி விளைவாக அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் 1978 இல் ஜே.ஆர் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய தனிநபர் தனிக்கட்சி சர்வாதிகாரம் போன்ற பயங்கரவாத சூழலே தலைவிரித்தாடும். அத்தகைய இராணுவ மயப்பட்ட தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் ஏகப் பெரும்பான்மையான அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடி நிலைகளுக்கு உள்ளாக நேரிடும்.

அவர்கள் மீது ஜனநாயக விரோத அரசியல் அடக்குமுறைகள் பன்மடங்கு வேகத்துடன் முன்தள்ளப்படும் அபாய நிலையே தோற்றுவிக்கப்படும். ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி இராணுவ மயப்படுத்தலை நடைமுறைப்படுத்தி வருவதுடன் பேரினவாத முன்னெடுப்புக்களையும் இணைந்துச் செயல்படுகிறது. இந்நிலையில் 20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எஞ்சியுள்ள அனைத்து ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகள் யாவும் அதிகார கால்களில் போட்டு மிதிக்கபடும் அபாய சூழ்நிலை உருவாகும்.

அந்நிய வல்லரசு சக்திகளின் நவகாலனிய நிகழ்ச்சி நிரலுக்கு அடி பணிவதற்கான வகையிலும் 20 ஆவது திருத்தம் பயன்படுத்தப்படும் என்பதும் மறைக்கப்படும் ஒன்றாகும். மேலும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் வாயிலாக நிறைவேற்று அதிகாரம் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

தொல்பொருட்களைக் கண்டறிந்து பாதுகாப்பதற்கான செயலணி, மாடுகள் இறைச்சியாக்கப்படுவதற்கு தடைக்கான முன்னெடுப்பு, பதின்மூன்றாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பற்றிய இறுகிய மௌனம், வீடு, காணி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்புக்கள் என்பன உதாரணங்களாக காணப்படுகின்றன.

எனவே, அனைத்து உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் அனைத்து ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளுக்கும் அபாயமான சூழலைக் கொண்டுவரும் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறது. அதேவேளை இச்சட்ட மூலத்தை இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மக்களை ஐக்கியப்படுத்தி எதிர்த்து நிராகரிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.