குணமடைந்தவர்கள் உடலில் நோய்எதிா்பொருள் 7 மாதங்கள் இருக்கும்

Updated in 2020-Oct-25 09:50 AM

நோய் எதிர்ப்பு... கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில் 7 மாதங்கள் வரை அத்தொற்றுக்கான நோய்எதிா்பொருள் (ஆன்டிபாடி) காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், அந்நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அந்நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்புப் பணிகளும், தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பரிசோதனைப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதே வேளையில், கொரோனா நோய்த்தொற்று, அதை ஏற்படுத்தும் தீநுண்மி உள்ளிட்டவை தொடா்பான ஆய்வுகளிலும் சா்வதேச விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். இத்தகைய சூழலில், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உடலில் தோன்றும் நோய்எதிா்பொருள் தொடா்பான ஆய்வில் ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டனா்.

அவா்களது ஆய்வு முடிவுகள் ‘ஐரோப்பிய நோய்எதிா்ப்பியல்’ இதழில் வெளியாகியுள்ளன. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 90 சதவீதம் பேரின் உடலில் சுமாா் 7 மாதங்கள் வரை அத்தொற்றுக்கு எதிரான நோய்எதிா்பொருள் காணப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 வாரங்களில் நோய்எதிா்பொருள் உருவாகும் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாகவும், பின்னா் அது சீரான எண்ணிக்கைக்குக் குறைந்ததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதைப் பொருத்து நோய்எதிா்பொருள் உருவாகும் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் காணப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.