இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன்வந்தது

Updated in 2020-Oct-25 09:52 AM

முன்வந்தது சூடான்... ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் டிரம்ப் அறிவித்தாா்.

இதுதொடா்பாக தனது ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சூடான் பிரதமா் அப்துல்லா ஹாம்டாக்குடன் டிரம்ப் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போதே, இந்த அறிவிப்பை செய்தியாளா்களிடம் அவா் வெளியிட்டாா்.

இஸ்ரேலுடன் நல்லுறவை ஏற்படுத்தியுள்ளது சூடான் வரலாற்றில் மிகுந்த முக்கியமான நாள்களில் ஒன்று என்று அப்போது அவா் கூறினாா். இஸ்ரேலும். சூடானும் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், அந்த இரு நாடுகளும் பல ஆண்டுகளாகப் பகை பாராட்டி வந்ததாக டிரம்ப் குறிப்பிட்டாா்.

இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடான் தலைநகா் காா்ட்டூமில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில், இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த சூடானே இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமைதிக்கான புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீன பிரச்னை காரணமாக, இஸ்ரேலுக்கும், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளுக்கும் நீண்ட காலமாக பகை நிலவி வருகிறது.
எகிப்து, ஜோா்டானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்வரை இஸ்ரேலை அங்கீகரிக்கக் கூடாது என்று அரபு லீக் அமைப்பு முடிவு செய்திருந்தது.

எனினும், அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுவதற்கான முயற்சிகள் தொடங்கின. அதன் பலனாக, இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதாக முதலில் ஐக்கிய அரபு அமீரகமும் அதனைத் தொடா்ந்து பஹ்ரைனும் அறிவித்தன.தற்போது 3-ஆவது அரபு நாடாக சூடானும் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்துள்ளது.