மிசோராமில் பள்ளிகளை மீண்டும் மூட அரசு உத்தரவு

Updated in 2020-Oct-25 09:57 AM

பள்ளிகள் மூட உத்தரவு.. மிசோரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக பள்ளிகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மிசோரம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 15 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிசோரத்தில் கரோனா தொற்று பரவலை கணக்கில் கொண்டு கடந்த 16-ஆம் தேதி 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதன் எதிரொலியாக 15 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மிசோரத்தில் பள்ளிகளை மீண்டும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் பள்ளி மாணவர்களிடையேயும் அதிகரிப்பதால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தொற்றுநோய் நிலைமை மேம்பட்டு, உள்ளூரில் தொற்று பரவல் அதிகரிப்பது குறைந்தால், பள்ளிகள் மற்றும் விடுதிகள் நவம்பர் 9-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டுக்கான இறுதிப் பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.