கொரோனா நோயாளிகள் பலர் பொது போக்குவரத்தில் பயணம் செய்ததாக கண்டுபிடிப்பு

Updated in 2020-Oct-28 01:41 AM

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலர் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலர் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் பயணித்த பேருந்துகள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுபடுத்திக் கூறமுடியாத நிலைமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாகவே, அரச மற்றும் தனியார் பேருந்து துறையினரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இதேநேரம், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த பேருந்துகளின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பேருந்துகளில் கொரோனா நோயாளர் யயணித்திருந்தால், அந்தப் பேருந்தில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.