முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனம்

Updated in 2020-Nov-17 06:39 AM

எச்சரிக்கை விடுத்துள்ள மைக்ரோ சாஃப்ட்... முன்னணி டெக் நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசாஃப்ட், கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் தடுப்பூசி தொடர்பான விவரங்களைத் திருடுவதில் தீவிரமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் சுகாதார அமைப்புகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இந்த ஹேக்கர்கள் குறிப்பாகத் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களைக் குறிவைக்கின்றன. சமீபத்தில் அப்படி நடந்த சில தாக்குதல்கள் குறித்த விவரங்களை அரசுகளிடம் பகிர்ந்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

இந்தியா, கனடா, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களே பெரிதும் குறிவைக்கப்பட்டிருக்கின்றனவாம். Strontium(Fancy Bear) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த அமைப்பும், வடகொரியாவைச் சேர்ந்த Zinc (Lazarus Group) மற்றும் Cerium அமைப்புகளும் இந்த தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.

மறைமுகமாக அந்தந்த நாட்டின் அரசுகளால் ஊக்கிவிக்கப்படும் ஹேக்கர் அமைப்புகளே இவை.