கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜ, திமுக இணைந்து போராட்டம்

Updated in 2020-Nov-19 07:30 AM

கோயிலை இடிக்கக்கூடாது என்று திமுகவும் பாஜகவும் இணைந்து நடத்திய போராட்டம் தூத்துக்குடி மக்களை வியக்க வைத்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி 80 அடி சாலையில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது.. இது ரொம்ப காலமாக உள்ள கோயில் என்பதால், சுற்றுவட்டாரத்தில் ஃபேமஸ் ஆனது. இந்த பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.  அதற்காக ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை இடிக்க, நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விஷயம் தெரிந்ததும் பாஜகவினர் விரைந்து கோயில் பகுதிக்கு திரண்டு வந்துவிட்டனர். கோயிலை இடிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் இறங்கினர். இந்த விஷயம் கேள்விப்பட்ட திமுக எம்எல்ஏ கீதாஜீவனும் சம்பவ இடத்துக்கு வந்து, அவரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஒரே நேரத்தில், ராத்திரி நேரத்தில், கோயில் நிர்வாகத்தினர், பாஜகவினர், திமுகவினர் என மொத்தமாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், என்ன செய்வதென்றே தெரியாமல், அதிகாரிகள் கோயிலை இடிக்காமல் திரும்பி சென்றுவிட்டனர். மறுநாள் போலீசுடன் வந்தபோதும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  மறுபடியும் கீதாஜீவனும், பாஜகவினரும் திரண்டு வந்தனர். நடுரோட்டிலேயே உட்கார்ந்து கோயிலை இடிக்கக்கூடாது என்று மறியலில் ஈடுபட்டனர்.

அதற்குள் டிஎஸ்பியும் தகவலறிந்து வந்து கீதாஜீவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.. கோயிலுக்கு எந்த சேதமும் இல்லாமல், கழிவு நீரோடை அமைப்பதாகவும், அப்படி அமைக்கும்போது ஏதாவது கோயிலுக்கு சேதம் ஏற்பட்டால், அதை மாநகராட்சியே சரி செய்து தரும் என்றும் உறுதி தந்தார். இதையடுத்தே மறியல் கைவிடப்பட்டது. அரசியலில் ஆயிரம் பிரச்சனைகள், கருத்து மோதல்கள், எதிர்ப்புகள் இருந்தாலும், கோயில் பிரச்சனை என்றதும், இந்துமத நம்பிக்கைக்காக பாஜ., திமுக, கைகோர்த்து ஒன்றாக நின்றது தூத்துக்குடி மக்களை திகைக்க வைத்துவிட்டது.