மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா உறுதியானது

Updated in 2020-Nov-19 11:58 AM

மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறைக்கான அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்புக்கான தொடக்க அறிகுறிகள் தெரிந்தவுடன், அதற்கான பரிசோதனைகளை நான் செய்து கொண்டேன். அதன் முடிவில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்கிறேன். அதற்கான விதிமுறைகளையும் பின்பற்றும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சர்களில் அமித் ஷா உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.