ஆஸ்திரேலியா தொடரில் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார்; ரிக்கி பாண்டிங் ஆரூடம்

Updated in 2020-Nov-20 10:40 AM

ஆஸ்திரேலியா தொடரில் கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு கூடுதல் நெருக்கடியாகும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா 3 ஒருநாள் டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடரில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்து தொடங்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டன் விராட்கோலி முதல் டெஸ்ட் முடிந்து நாடு திரும்ப உள்ளார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் நாடு திரும்புவதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி விளையாடாதது இந்தியாவுக்கு நிச்சயம் இழப்பாகும். அவர் இல்லாவிட்டால் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சற்றே நெருக்கடியாக உணர்வார்கள். கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு கூடுதல் நெருக்கடியாகும்.

அது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரரை இந்தியா கண்டுபிடித்தாக வேண்டும். கடைசி 3 டெஸ்டில் மட்டுமல்ல, முதலாவது டெஸ்டில் கூட பேட்டிங் வரிசையில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதில் இந்திய அணி நிர்வாகம் தெளிவான மனநிலையில் இல்லை என்றே தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.