அதிமுக செய்தி தொடர்பாளராக இணைக்கப்பட்டார் அப்சரா ரெட்டி

Updated in 2020-Nov-29 02:27 AM

செய்தி தொடர்பாளராக நியமனம்... அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் அப்சரா ரெட்டி.

இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். இனி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பங்கேற்று பேசுவார் அப்சரா ரெட்டி.

லண்டனில் படித்திருப்பதாக கூறப்படும் அப்சரா கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் டாக் ஷோ நடத்தி வந்த அப்சரா ரெட்டி. ஜெயலலிதா முன்னணியில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார். சசிகலா குடும்பத்துடன், இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணபிரியாவின் நெருக்கமான தோழி என்று கருதப்பட்டார்.

அங்கு ஏற்பட்ட மனக்கசப்பில் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசியச்செயலாளராக இருந்த அப்சரா ரெட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தியில் இருந்தார்.

இதனையடுத்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவருக்கு செய்தித்தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி இன்று முதல் இணைத்து கொள்ளப்படுகிறார்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்களில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பேசுவதற்காக அப்சரா ரெட்டி அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.