விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் திரையரங்குகளில்தான் ரிலீஸ்

Updated in 2020-Nov-29 07:36 AM

திரையரங்குகளில்தான் ரிலீஸ்... விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தளபதி விஜய்யின் மாறுபட்ட புதிய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் செய்துள்ளனர். இப்படத்தை சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இதனிடையே மாஸ்டர் படமும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் தளத்தில் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தகவலால் தியேட்டர் உரிமையாளர்களும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் பரவியது.

இதை அடுத்து மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் வெளியிட்டை எந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பதை அறிவோம். மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதே தற்போதைய சூழலில் சரியாக இருக்கும்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். பிரபலமான ஓடிடி தளங்களில் இருந்து எங்களை அணுகியபோதும், படத்தை திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். தமிழ் திரைப்பட துறையை மீட்டெடுக்க திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாஸ்டர் படம் எதில் வெளியீடு, எப்போது வெளியீடு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.