உறவினர்கள் பொறுப்பேற்காத உடல்கள் அரசு செலவில் தகனம் செய்யப்படும்

Updated in 2020-Dec-02 02:10 AM

அரசாங்கம் ஏற்கும்... கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடலை பொறுப்பேற்காத சந்தர்ப்பத்தில் உடலை தகனம் செய்யும் செலவினை அரசாங்கமே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் கையெழுத்தில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்கள் பலரின் உடல்கள் இன்று வரை அரச வைத்தியசாலைகளின் சவச்சாலையில் குவிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உறவினர்களால் பொறுப்பேற்காத உடல்களை அரசாங்கமே பொறுப்பேற்று அரச செலவில் தகனம் செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.