ரசிகர்கள் கூடுவதால் லாபம் படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு

Updated in 2020-Dec-02 02:43 AM

லாபம் படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் லாபம். ஸ்ருதிஹாசன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். படத்துக்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

விஜய்சேதுபதி கலந்துகொண்டுள்ள இப்படப்பிடிப்புக்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துவிடுகிறார்கள். முறையாக கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை. நிறைய ரசிகர்கள் மாஸ்க் போடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் விஜய்சேதுபதியைச் சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.

விஜய்சேதுபதியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்களை சந்தித்து பேசியும், கைகொடுத்தும் வருகிறார். இந்த சம்பவத்தைப் பார்த்த ஸ்ருதிஹாசனுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

ரசிகர்களுடன் கைகொடுத்து பேசிவிட்டு, தன்னுடன் டூயட் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதே ஸ்ருதிக்கு இருந்த கவலை. ஒருமுறை, படப்பிடிப்பிலிருந்து சொல்லிக் கொள்ளாமல் ஸ்ருதி கிளம்பி விட்டதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக, போலீஸ் பாதுகாப்பினைக் கேட்டிருக்கிறது லாபம் படக்குழு. இன்னும் பத்து நாட்களுக்குப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. அதுவரை போலீஸ் பாதுகாப்புடன் நடக்கும் என்று சொல்கிறார்கள்.

இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவரின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். சமூக போராளியாக படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். விரைவிலேயே பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாக இருக்கிறது.