எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Updated in 2021-Jan-09 03:25 AM

செம விற்பனை... கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுசந்தையில் பொங்கல் பண்டிகை மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியை தொடர்ந்து ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக தெரிய வந்துள்ளது.
 
தென்மாவட்டத்தில் ஆடுகள் விற்பனைக்கு புகழ்பெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. மதுரை, தேனி, விருதுநகர், சென்னை, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் வருவது இயற்கை. வாரம் தோறும் சனிக்கிழமை இங்கு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம்.
 
சாதாரண நாள்களில் 1 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையிலும், விழாக்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இன்னும் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் இந்த வார ஆட்டுச்சந்தை களைகட்டியது.
 
கடந்த சில வாரங்களை விட இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் பத்தாயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று ரூபாய் 15,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
 
ஆட்டுக்குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை எடைகளுக்கு ஏற்ப ரூபாய் 4 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேலும் தற்போது பறவை காய்ச்சல் அதிகரித்துள்ளதாலும், பொதுமக்கள் பார்வை ஆட்டிறைச்சி மீது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விளையும் கடந்த சில வாரங்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.
 
இது குறித்து ஆட்டு வியாபாரி செய்யது அலி கூறுகையில் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களே இருப்பதால் ஆடுகள் விற்பனை இன்று அதிகளவில் நடைபெற்றதாகவும், பறவைக் காய்ச்சல் காரணமாக ஆட்டு இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் அதிகமாக ஆடுகளை வாங்கிச் சென்றதாகவும், கடந்த பொங்கல் பண்டிகையை விட இந்த ஆண்டு வியாபாரம் நன்றாக நடைபெற்றது என்றும், சுமார் ரூ5 கோடி முதல் ரூ6 கோடி வரை விற்பனை நடைபெற்றதாகவும், ஆடுகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.

ஆடுகள் விற்பனை போன்று, ஆடுகள் வளர்ப்புக்கு தேவையான கம்பு, அரிவாள் விற்பனையும் பரபரப்பாக நடைபெற்றது. கொரோனா ஊரடங்கினால் ஆட்டுச்சந்தை கலை இழந்து இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை விற்பனை சுமார் 6 கோடி வரை நடைபெற்றுள்ளதால் இனி வரும் காலங்களிலும் ஆடுகள் விற்பனை நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.