3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் 

Updated in 2021-Jan-10 04:09 AM

ஆஸ்திரேலியா அணி டிக்ளேர்... இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 312 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்துள்ளது.

சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களையும், இந்தியா 244 ரன்களையும் சேர்த்தன. இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவான நேற்று 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து 4ம் நாளான இன்று தனது 2வது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. மார்னஸ் லபுஸ்கனே, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் க்ரீன் ஆகியோர் சிறப்பாக விளையாடவே ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

மார்னஸ் லபுஸ்கனே 73 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேமரூன் க்ரீனும் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதைத் தொடர்ந்து 407 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. முன்னதாக போட்டியின் இடையே மைதானத்திலிருந்த ரசிகர்கள் இனவெறியில் இந்திய வீரர்களை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய வீரர்கள் அளித்த புகாரை அடுத்து, போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு தொடங்கப்பட்டது.