இந்திய அணி வீரர்களின் பொறுப்பான ஆட்டம்; சிட்னி டெஸ்ட் போட்டி டிரா 

Updated in 2021-Jan-11 09:28 AM

இந்திய அணி வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷாப் பன்ட், புஜாரா, அஷ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 'டிரா' செய்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338, இந்தியா 244 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்த 'டிக்ளேர்' செய்தது. பின், 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 98 ரன் எடுத்திருந்தது.

புஜாரா (9), ரகானே (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 309 ரன்கள் தேவை என்ற நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் அஜின்கியா ரகானே (4) ஏமாற்றினார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட், 64 பந்தில் அரை சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த புஜாரா தன்பங்கிற்கு அரை சதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 148 ரன் சேர்த்த போது லியான் 'சுழலில்' பன்ட் (97) சிக்கினார்.

ஹேசல்வுட் பந்தில் புஜாரா (77) போல்டானார்.பின் இணைந்த அஷ்வின், ஹனுமா விஹாரி ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறனர். கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி (23), அஷ்வின் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான், ஹேசல்வுட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் ஜன. 15ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.