கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின

Updated in 2021-Jan-15 09:46 AM

விவசாயிகள் வேதனை... கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சி வலுவாக இருந்த காரணத்தால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கனமழையோ, புயலோ அதிகமாக பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டமாகத்தான் உள்ளது.

அந்த வகையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. திரண்டு வளர்ந்து இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த பயிர்களும் நீரில் மூழ்கியதால், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை மறந்து கவலையில் ஆழ்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த தங்களை தற்போது பெய்து வரும் தொடர் மழை மீண்டும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது ஒரு புறமிருக்க, மாவட்டத்தின் பல பகுதிகளில் ஓடைகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.